×

ஆவடி காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்ற 26 கடைகளுக்கு சீல்: 200 கிலோ பறிமுதல் ரூ. 6.5 லட்சம் அபராதம் உணவு பாதுகாப்பு துறை அதிரடி

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்தில் உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்ற 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 200 கிலோ போதைப் பொருள் பறிமுதல் மேலும், ரூ. 6,50,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் போதை பொருட்கள் ஒழிப்பு சிறப்பு அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அதிரடி சோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், ஆவடி காவல் ஆணையரக தனி படையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட 16 குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட முக்கிய இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், மார்க்கெட், பஜார் போன்ற பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகை கடைகள், தேனீர் விடுதிகள் போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் குட்கா, கூல்லிப், ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்து பல்வேறு வழக்குகள் பதிந்த நிலையில் எச்சரிக்கையை மீறி போதைப் பொருட்கள் விற்பனை செய்த 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்த சுமார் 26 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் கடைகள் மூடப்பட்டது.

மேலும், குட்கா பொருட்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த போதைப் பொருட்கள் தொடர்பான சோதனை மூலம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.6,50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

* வீட்டில் பதுக்கி விற்பனை செய்த 3 பேர் கைது

சென்னை போரூர், மதனந்தபுரம் குன்றத்தூர் சாலையில் தனியார் கம்பெனிகள், குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் அப்பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாவா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, உளவுத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த ஆவடி காவல் ஆணையராக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், நேற்று சம்பவ இடத்திற்கு சென்று திடீரென்று சோதனை செய்தனர். அப்போது, ஒரு வீட்டில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நரேஷ்(42), ராமரத்தன்(35), சபில் குருதாஸ்(25). ஆகிய 3 பேரும், மகாராஷ்ராவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து, அதனை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து ரூ.100 முதல் ரூ.500 வரை போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 15 கிலோ மாவா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, குட்கா பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட நரேஷ், ராமரத்தன், சபில் குருதாஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தகவலறிந்த ஆவடி காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர் ஐமன் ஜமால், கூடுதல் துணை ஆணையர் ஸ்டீபன், காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆவடி காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்ற 26 கடைகளுக்கு சீல்: 200 கிலோ பறிமுதல் ரூ. 6.5 லட்சம் அபராதம் உணவு பாதுகாப்பு துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Gutka ,Avadi Police Commissionerate ,Aavadi ,Aavadi Police Commissionerate ,Aavadi Police Commission ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு...